வீட்டு பாடம் செய்யாததை கண்டித்த ஆசிரியைக்கு மிரட்டல் குமரியில் புரையோடும் பழக்கம்
மார்த்தாண்டம்,பிப்.21: மார்த்தாண்டம் அருகே வீட்டு பாடம் செய்யாததை கண்டித்த பள்ளி ஆசிரியையை மாணவர்கள் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் இறைவணக்கம் பாட செல்லாத இரண்டு மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்ததால், “சென்னையை போல சம்பவம் நடக்கும்” என்று ஆசிரியரை மிரட்டியதாக கொடுத்த புகாரின் பேரில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கல்வி கற்றவர்கள் அதிகம் கொண்ட குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் அருகேயுள்ள அரசு பள்ளியில் நடந்ததாக எழுந்த புகாரால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மார்த்தாண்டம் அருகே நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கு ஆங்கில ஆசிரியை வீட்டுப்பாடம் கொடுத்ததாகவும், அதை செய்யாததால் அவர் மாணவர்களை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மூன்று மாணவர்கள் திட்டமிட்டு புத்தகபையில் ஒரு கத்தியை வைத்து பள்ளிக்கு கொண்டு வந்ததாகவும், ஆசிரியையிடம் கத்தியை காட்டி, “சென்னை பள்ளியில் நடந்தது தெரியுமா? அதுபோல உனது படமும் பத்திரிகை, தொலைகாட்சியில் வரவேண்டுமா” என மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை இதுகுறித்து ஆசிரியர் கூட்டணிக்கும், சங்கத்திற்க்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கும் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மார்த்தாண்டம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தை எண்ணாமல் உணர்ச்சிவசப்பட்டு சென்னை மாணவன் செய்த செயலால் இன்று தனது எதிர்காலத்தையே இழந்து தவிக்கிறான். அந்த மாணவனை கண்டு தங்களது வாழ்க்கையயும் சீரழிவு பாதைக்கு கொண்டு செல்லும் மாணவர் சமுதாயத்தை நல்வழி காட்டி கொண்டுவர பள்ளி கல்வித்துறையும், பெற்றோர்களும் முழுமுயர்ச்சி எடுக்க வேண்டியது மிக அவசியம்.
திருநந்திக்கரையில் பரிகார பூஜை வரும் 19ல் திருவிழா கொடியேற்று விழா
திற்பரப்பு,பிப்.18: திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயிலில் நடந்து வரும் பரிகார பூஜை நேற்று நிறைவடைந்தது. வரும் 19ம் தேதி சிவராத்திரி திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. பழமை வாய்ந்த இக்கோயிலில் சரியான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமலும், பூஜைகள் நேர்த்தியாக செய்யாததாலும் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் முனோடியாக ஏழு நாட்கள் நடந்து வந்த பரிகார பூஜைகளும், ஹோமங்களும் நேற்று(17ம் தேதி) நிறைவடைந்தது. வரும் 19ம் தேதி இவ்வருட சிவராத்திரி திருவிழாவிற்கான கொடியேற்றம் நடக்கிறது. மாலை 6ல் இருந்து 7.30 க்கு இடைப்பட்ட சுபமுகூர்த்தத்தில் கொடியேற்றப்படுகிறது. பன்னிரு சிவாலயங்களில் சிவராத்திரியை முன்னிட்டு வருடாந்திர விழா நடக்கும் ஒரே கோயில் இதுவேயாகும்.
விழா நாட்களில் புராண பாராயணம், நவகாபிஷேகம், சமய சொற்பொழிவு, அன்னதானம், எழுந்தருளல் பஜனை, கலைநிகழ்ச்சி நடக்கிறது. எட்டாம் நாளான 26ம் தேதி மாலை 1008 திருவிளக்கு பூஜை, ஒன்பதாம் நாள் திருமணநிதி உதவி வழங்கல், சிறப்பு பூஜைகள், பத்தாம் நாள் காலை சுவாமி யானை மீது ஊர் பவனி, இரவு தாலப்பொலி, சுவாமி ஆறாட்டு, தொடர்ந்து கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.
தேர்வுக்கு வினாத்தாள் அனுப்பாத பல்கலைக்கழகத்துக்கு அபராதம்
நாகர்கோவில்,பிப்.18: நாகர்கோவிலில் நடந்த தொலைதூர கல்வி தேர்வில் வினாத்தாள் அனுப்பாத மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
தொலையாவட்டம் மாதாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. ராணுவ வீரரான இவர் போபாலில் பணியாற்றி வருகிறார். ராணுவத்தில் அதிகாரியாக பதவி உயர்வு பெற பட்டப்படிப்பு தேவைப்பட்டதால் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி மூலம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியில் சேர்ந்து படித்து வந்தார். 2010 டிசம்பர் தேர்வுக்காக கட்டணம் கட்டி நுழைவு சீட்டு பெற்றிருந்தார். தேர்வு மையத்தில் முதல் இரண்டு நாட்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வு எழுதியுள்ளார். அதைத்தொடர்ந்து முக்கிய பாடங்களான மூன்று பாடத்திற்கும் தேர்வு எழுத செல்லும்போது வினாத்தாள் வராத காரணத்தால் தேர்வு எழுத முடியாமல் வீடு திரும்பியுள்ளார்.
இது குறித்து பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்கப்படவில்லை. எனவே அவர் கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மையம் மூலம் நாகர்கோவில் நுகர்வோர் கோர்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பாராஜ், உறுப்பினர் சகிலாகுமரி ஆகியோர் வினத்தாள்கள் அனுப்பி வைக்காதது சேவை குறைபாட்டை காட்டுகிறது. எனவே பாதிக்கப்பட்ட பிரபுவுக்கு நஷ்டபரிகாரமாக 5000 ரூபாயுடன் போக்குவரத்து செலவிற்கு 1500 ரூபாயும், வழக்கு செலவுக்கு 1000 ரூபாயும் பல்கலைக்கழக அதிகாரிகள் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளார்.
தொடரும் மின்வெட்டிற்கு கண்டனம் கூடன்குளம் அணுமின் நிலையம் திறப்பு வரும் 25ல் ஊர்வலம் ஆர்ப்பாட்டம்
புதுக்கடை, பிப்.14: கூடன்குளம் அணுமின் நிலையம் உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தியும், குமரி மவட்டத்தில் நிலவும் மின்வெட்டை கண்டித்து வரும் 25ம் தேதி காங்., சார்பில் கண்டன ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் நடக்கிறது.
இதுகுறித்து சட்டசபை காங்., கொறடா ஜாண்ஜேக்கப் எம்.எல்.ஏ. கூறியதாவது:
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு இருக்காது என கூறினார். இதை நம்பி மக்களும் ஓட்டு போட்டு ஜெயலலிதாவை முதல்வராக்கினார். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டு மணி நேரம் மின்வெட்டு என கூறினார். தற்போது எந்நேரமும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. குறந்தது ஒரு நாள் 10 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவுகிறது. மின்வெட்டு பிரச்சனையால் தொழிலாளர்கள், சிறு தொழில் நடத்துபவர்கள், வியாபாரிகள், விவசாயிகள், கல்வி நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஆண்டு இறுதி தேர்வுக்கு தயாராகி வரும் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., மாணவ, மாணவியர் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த மின்வெட்டை நிவர்த்தி செய்ய கூடன்குளம் அணுமின் நிலையம் திறப்பது அவசியமாகும்.
ராஜீவ்காந்தியின் கனவை நிஜமாக்கும் வகையிலும், தமிழகத்தை மின்வெட்டில் இருந்து மீட்டெடுக்கவும், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு கூடன்குளத்தில் அணுமின் நிலையத்தை அமைத்தது. அது செயல்பட துவங்கும் நேரத்தில் அதை தடுத்து நிறுத்துவது நாட்டுக்கு செய்யும் துரோகம்.
கூடன்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க கேட்டும், குமரியில் தொடரும் மின்வெட்டை கண்டித்தும் வரும் 25ம் தேதி எனது(ஜான்ஜேக்கப் எம்.எல்.ஏ.,) தலைமையில் முன்சிறையில் இருந்து புதுக்கடை வரை கண்டன ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் நடக்கிறது.
இவ்வாறு ஜாண்ஜேக்கப் எம்.எல்.ஏ., கூறினார்.
நாகராஜா கோயில் தேரோட்டம் கோலாகலம்
நாகர்கோவில்,பிப்.09: நாகர்கோவில் நாகராஜா கோயில் தைப்பெருந் திருவிழாவையொட்டி தேரோட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. குமரி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கோயிலகளில் நாகர்கோவில் நாகராஜா கோயிலும் ஒன்று. இக்கோயிலில் இந்த வருட தைப்பெருந்திருவிழா கடந்த ஜனவரி 30ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. 9 ம் நாள் விழாவான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தின் துவக்கமாக அனந்தகிருஷ்ணன், பாமா, ருக்மணி ஆகியோரை கோயிலில் இருந்து கொண்டு வந்து தேரில் அமர வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தேரானது நாகராஜா ரத வீதிகளில் வலம் வந்தது. தேர் மதியம் 11.58 மணிக்கு நிலைக்கு வந்தது. மாலை ஆன்மிக சொல்லரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பக்தி மெல்லிசை ஆகியன நடந்தது. தொடர்ந்து அலங்கார யானைபவனி, மற்றும் நாதஸ்வர இசை, சிங்காரி மேளதாளத்துடன் சப்தாவர்ணம் நடந்தது.
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு ரூ. 1 கோடியில் புதிய படகு
கன்னியாகுமரி,பிப்.09: கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மும்பையில் கட்டப்பட்டு வரும் புதிய படகு மார்ச் மாதத்தில் கன்னியாகுமரி வரும் என்று பூம்புகார் போக்குவரத்து கழக மேலாளர் சொர்ணபாண்டியன் தெரிவித்தார். கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் எம்.எல்.பொதிகை, எம்.எல்.குகன் மற்றும் பாகிரதி ஆகிய மூன்று படகுகள் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகு சேவையில் ஏடுபட்டு வருகிறது. இதில் பாகிரதி படகு வாங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அதற்கு மாற்றாக புதிய படகு வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய படகு கட்டுமான பணி தற்போது மும்பையில் நடந்து வருகிறது. 80 சதவீதம் பணி முடிந்துள்ள இப்படகில் 150 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. நவீன பாதுகாப்பு அம்சம் கொண்ட இப்படகு தற்போது மத்திய அரசின் தரக்கட்டுப்பாடு சான்றிதழ் பெறுவதற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பணிகள் முழுமையாக முடிந்து அடுத்த மாதம்(மார்ச்) இரண்டாம் வாரத்தில் கன்னியாகுமரி வர வாய்ப்பு இருப்பதாக பூம்புகார் அதிகாரி சொர்ணபாண்டியன் தெரிவித்தார்.
குமரி மாவட்டத்தில் “நிகழாண்டில் 70 ஆயிரம் பேருக்கு இலவச மிக்சி”
நாகர்கோவில், பிப்.07: கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டில் 70 ஆயிரம் பேருக்கு தமிழக அரசின் இலவச மிக்சி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுமென அமைச்சர் பச்சைமால் திங்கள்கிழமை கூறினார்.
கல்குளம் வட்டம், ககோட்டுத்தலை ஊராட்சிகுள்பட்ட 623 பேருக்கும் விளவங்கோடு வட்டம், சுழால் ஊராட்சிக்குள்பட்ட 908 பேருக்கும் இலவச மிக்சி உள்ளிட்டவற்றை வழங்கி அவர் பேசியதாவது :
தமிழகத்தில் உள்ள ஏழை மக்கள் வாழ்க்கைத்தரம் உயரவும், அவர்களின் பொருளாதாரம் பெருகவும் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.
எவ்வித பாகுபாடும் இன்றி குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார்.
இம்மாவட்டத்தில் நிகழாண்டில் 70 ஆயிரம் பேருக்கு தமிழக அரசின் இலவச மிக்சி உள்ளிட்டவை வழங்கப்படும் என்றார் அவர்.
பிள்ளையார்புரத்திலிருந்து ஆசாரிப்பள்ளத்துக்கு புதிய பஸ் வசதி
நாகர்கோவில்,பிப்.07: பிள்ளையார்புரத்திலிருந்து ஆசாரிப்பள்ளத்துக்கு புதிய பஸ் வசதியை அமைச்சர் கே.டி. பச்சைமால் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவுக்கு, தென்குமரி கல்விக்கழகத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமை வகித்தார்.
அமைச்சர் கே.டி. பச்சைமால் கொடியசைத்து புதிய வழித்தடத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கல்லூரி மற்றும் தென்குமரி கல்விக்கழக நிர்வாகிகள், அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் சிவசங்கரலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பள்ளியில் படிக்கும் போதே மாணவர்கள் திறமைகளை வெளிபடுத்த வேண்டும் : முதன்மை கல்வி அதிகாரி
நாகர்கோவில்,பிப்.07 : பள்ளியில் படிக்கும் போதே மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிபடுத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 10 வது வகுப்பு மற்றும் 12 வது வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கும்,விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மாணவர்களாகிய உங்களுக்கு பள்ளிபருவம் மிக முக்கியமானது. இங்கு நல்ல படிப்புகள், பழக்க வழக்கங்களை கற்று கொள்ள வேண்டும். பள்ளியில் படிக்கும் போதே, நமக்கு பிடித்தமான துறையில் தன்னுடைய் தனித்திறமைகளை மாணவர்கள் வெளிபடுத்த வேண்டும்.
இந்த பள்ளிப்படிப்பை முடித்து மாணவர்கள் வெளியே செல்லும் போது அவரின் அடையாளத்தை பள்ளியில் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஆப்பிக்கோடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் விழா
மார்த்தாண்டம்,பிப்.07 : ஆப்பிக்கோடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் தைமாத கொடை விழாவில் முன்சிறை முனிமார்தோட்டம் முருகன் கோயிலில் இருந்து காவடி பவனி நடந்தது.
ஆப்பிக்கோடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் தைமாத கொடை விழா கடந்த 29ம் தேதி துவங்கியது. விழாவின் 8வது நாள் முன்சிறை முனிமார்தோட்டம் முருகன் கோயிலில் இருந்து பறக்கும் காவடி, புஷ்பகாவடி, ஆப்பிள் காவடி, கதிர்காவடி, வேல்குத்து, விளக்குகட்டு, பால்குட பவனி மற்றும் யானை ஊர்வலம் நடந்தது. காவடி பவனி திருமலை மகாதேவர் கோயில், புதுக்கடை, கைசூண்டி, வெள்ளையம்பலம், சடையங்குழி, கிள்ளியூர், தொலையாவட்டம், மாதாபுரம் வழியாக ஆப்பிக்கோடு அம்மன் கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழாகுழுவினர் செய்திருந்தனர்.